சன் மூன் ஸ்டார் சுழற்கோப்பை சிறுவர் கால்பந்து போட்டி! இறுதிப் போட்டியில் மக்காம் யுனைட்டெட் அணி வென்றது!!
காயல்பட்டினம் நகரின் 15 வயதிற்குட்பட்ட சிறுவர்களிடையே கால்பந்து விளையாட்டின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கில் துவக்கப்பட்டது சன் மூன் ஸ்டார் கால்பந்து சுற்றுப் போட்டி. இந்த ஆண்டுடன் தொடர்ந்து மூன்றாமாண்டாக நடத்தப்பட்டு வரும் இச்சுற்றுப் போட்டியை தாய்லாந்து - பாங்காக் நகரிலுள்ள சன் மூன் ஸ்டார் நிறுவனத்தின் பங்குதாரரான சாக்கர் புகாரீ என்றழைக்கப்படும் எம்.எச்.புகாரீ குழுவினர் நடத்தி வருகின்றனர்.
கலந்துகொண்ட அணிகள்:
இச்சுற்றுப் போட்டியில், காயல்பட்டினம் நகரின் சி-யுனைட்டெட், வெஸ்டர்ன் கய்ஸ், காலரி பேர்ட்ஸ், கூல் டுடீ, கிங் சாக்கர், சி-ஃபயர்ஸ், சேஸிங் டைகர்ஸ், யூஃபா ஜூனியர்ஸ், மக்காம் யுனைட்டெட், ஹார்டி பாய்ஸ் ஆகிய அணிகள் பங்கேற்றன.
போட்டி நிகழ்வுகள்:
துவக்க நாள் போட்டிகள் 14.01.2011 அன்று துவங்கின. லண்டன் டாக்டர் எஸ்.ஓ.செய்யித் அஹ்மத், பாங்காக் சன் மூன் ஸ்டார் நிறுவன பங்குதார்ர் எம்.எச்.ஸாலிஹ் ஆகியோர் போட்டிகளைத் துவக்கி வைத்தனர்.
அரையிறுதிப் போட்டிகள்:
அரையிறுதிப் போட்டிகள் 17.01.2011 அன்று நடைபெற்றன. அன்று காலை 07.00 மணிக்கு நடைபெற்ற முதல் அரையிறுதிப் போட்டியில், யூஃபா ஜூனியர் அணியை மக்காம் யுனைட்டெட் அணி வென்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.
காலை 08.00 மணிக்கு நடைபெற்ற இரண்டாம் அரையிறுதிப் போட்டியில் கிங் சாக்கர் அணியை ஹார்டி பாய்ஸ் அணி வென்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.
இறுதிப் போட்டி:
அன்று மாலை 05.00 மணிக்கு இறுதிப் போட்டி துவங்கியது. ஹார்டி பாய்ஸ் அணியும் மக்காம் யுனைட்டெட் அணியும் இப்போட்டியில் களமிறங்கின. நகரப் பிரமுகர் எஸ்.எம்.எஸ். ஹஸன் அவர்களுக்கு வீரர்கள் அறிமுகம் செய்யப்பட்டனர்.
பின்னர் நடைபெற்ற ஆட்டத்தில், இடைவேளைக்குப் பிறகு அடுத்த இரண்டாம் நிமிடத்தில் ஹார்டி பாய்ஸ் அணி ஒரு கோல் அடித்தது. அதனைத் தொடர்ந்து மக்காம் யுனைட்டெட் அணியும் ஒரு கோல் அடித்தது. ஆட்ட நேர இறுதி வரை இரு அணிகளும் வேறு கோல் எதுவும் அடிக்காத நிலையில் போட்டி சமனில் முடிவுற்றது. பின்னர் சமன் பிரிப்பு மூலம் மக்காம் யுனைட்டெட் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
பரிசளிப்பு விழா:
அன்று மாலை 06.00 மணிக்கு பரிசளிப்பு விழா துவங்கியது. பாங்காக் கரூர் டிரேடர்ஸ் அதிபர் ஹாஜி எம்.எஸ்.செய்யித் முஹம்மத் தலைமை தாங்கினார். ஐக்கிய விளையாட்டு சங்கத்தின் துணைத்தலைவர் ஹாஜி எஸ்.எம்.உஸைர், வங்காளம் உமர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கிராஅத்தைத் தொடர்ந்து, பாலப்பா முஹம்மத் அப்துல் காதிர் வரவேற்புரையாற்றி, நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார்.
பின்னர், சுற்றுப் போட்டியின் சிறந்த வீரர்களுக்கான பரிசுகளை உ.ம.ஷாஹுல் ஹமீத், வங்காளம் உமர் ஆகியோர் வழங்கினர்.
ஹார்ட்ரிக் கோல் உட்பட அதிக கோல் அடித்த வீரருக்கான பரிசு யூஃபா ஜூனியர்ஸ் அணியின் ஷம்சுத்தீன் என்ற வீரருக்கும், சிறந்த வீரருக்கான பரிசு மக்காம் யுனைட்டெட் அணியின் ஹஸன் ரிஸா என்ற வீரருக்கும், சிறந்த கோல் கீப்பருக்கான பரிசு காலரி பேர்ட்ஸ் அணியின் எம்.ஒய்.உமருக்கும், சிறந்த தற்காப்பு வீரருக்கான பரிசு ஹார்டி பாய்ஸ் அணியின் எம்.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் என்ற வீரருக்கும், சிறந்த இளம் வீரருக்கான பரிசு சேஸிங் ஃபயர்ஸ் அணியின் நியாஸ், மிஸ்ஹல் ஆகியோருக்கும், சிறந்த அதிரடி ஆட்டக்காரருக்கான பரிசு சி-யுனைட்டெட் அணியின் அஃப்ரஸ் என்ற வீரருக்கும் வழங்கப்பட்டது.
வெற்றி பெற்ற அணி வீரர்களுக்கான தனிப்பரிசுகளை எஸ்.எம்.எஸ்.ஹஸன் வழங்கினார். வெற்றிக்கு முனைந்த அணியினருக்கான தனிப்பரிசுகளை வாவு ஷாஹுல் ஹமீத் என்ற வாவு காக்கா வழங்கினார்.
வெற்றி பெற்ற அணிக்கான கோப்பையை பாங்காக் கரூர் டிரேடர்ஸ் ஹாஜி எம்.எஸ்.செய்யித் முஹம்மத் வழங்கினார்.
வெற்றிக்கு முனைந்த அணிக்கான கோப்பையை ஹாங்காங் ஷாஹுல் ஹமீத் வழங்கினார். மூன்றாமிடம் பெற்ற அணிக்கான பரிசை ஹாஜி எஸ்.எம்.உஸைர் வழங்கினார்.
கலாமீ யாஸர் அரஃபாத் நன்றியுரையுடன் பரிசளிப்பு விழா நிறைவுற்றது. விழா ஏற்பாடுகளை மாஸ்டர் எஸ்.பி.பி.புகாரீ, ஷேக்னா உள்ளிட்டோர் செய்திருந்தனர்.