மாவட்ட அளவிலான கால்பந்து சூப்பர் லீக் போட்டி புள்ளி விபரங்கள்.
கடந்த மாதம் நடைபெற்று வந்த மாவட்ட அளவிலான கால்பந்து லீக் போட்டியில் அதிக புள்ளிகளை பெற்று நமதூர் ஐக்கிய விளையாட்டுச் சங்க அணி, நாசரேத் மர்காசிஸ் அணி, தூத்துக்குடி ராபின்சன் அணி மற்றும் தூத்துக்குடியை சேர்ந்த துறைமுக அணி ஆகியவை சூப்பர் லீக் போட்டிக்கு தகுதிபெற்றன. கடந்த 25-ந் தேதி திருச்செந்தூர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வி கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற சூப்பர் லீக் போட்டி ஒன்றில் நமதூர் ஐக்கிய விளையாட்டுச் சங்க அணியும் தூத்துக்குடி ராபின்சன் அணியும் விளையாடின.
ஆரம்பம் முதலே சுறு சுறுப்பாக விளையாடிய இரண்டு அணி வீரர்களும் தங்களது திறமையான ஆட்டத்தின் மூலம் பார்வையாளர்களை பரவசப்படுத்தினர். முதல் பாதி முடியும் வரை இரண்டு அணிகளும் கோல் எதுவும் அடிக்காமல் சமநிலையில் இருந்தனர். இரண்டாவது பாதி ஆட்டத்தில் இரண்டு அணிகளும் வெற்றிக்கான கோலை அடிக்க கடுமையாக போராடினர். ஆட்டம் முடிவடைய 10 நிமிடங்கள் இருக்கையில் ஐக்கிய விளையாட்டுச் சங்க அணி வீரர் சேக்கனா லெப்பைக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி அற்புதமான கோல் ஒன்றை அடித்தார்.
பின்னர் ஆட்ட நேர இறுதி வரை போராடியும் ராபின் சன் அணியால் கோல் அடிக்க முடியவில்லை. எனவே ஐக்கிய விளையாட்டுச் சங்க அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
கடந்த 27-ந் தேதி திருச்செந்தூர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வி கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற சூப்பர் லீக் போட்டி ஒன்றில் நமதூர் ஐக்கிய விளையாட்டுச் சங்க அணியும் தூத்துக்குடி துறைமுக அணியும் விளையாடின. அனுபவம் வாய்ந்த துறைமுக அணி வீரர்களுக்கு இணையாக நமதூர் ஐக்கிய விளையாட்டுச் சங்க அணியின் இளம் வீரர்கள் விளையாடினர். முதல் பாதி முடியும் வரை இரண்டு அணிகளும் கோல் எதுவும் அடிக்காமல் சமநிலையில் இருந்தனர்.
இரண்டாவது பாதி ஆட்டத்தில் இரண்டு அணிகளும் வெற்றிக்கான கோலை அடிக்க கடுமையாக போராடினர். இரண்டு அணிக்கும் கோல் அடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தும் தவறவிட்டனர். ஆட்டத்தின் இறுதி நிமிடத்தில் துறைமுக அணியினருக்கு கிடைத்த கோல் வாய்ப்பினை ஐக்கிய விளையாட்டுச் சங்க அணியின் கோல் கீப்பர் ஆஸாத் அற்புதமாக தடுத்து துறைமுக அணியின் வெற்றி வாய்ப்பை தட்டிபறித்தார். இறுதியில் 0-0 என்ற சமநிலையில் ஆட்டம் நிறைவடைந்தது.
இதுவரை நடைபெற்ற போட்டிகளின் புள்ளி விபரம்.
ராபின்சன் அணி 3 போட்டிகளில் விளையாடி ஒரு தோல்வி மற்றும் இரண்டு போட்டியில் சமநிலை பெற்றுள்ளது.
துறைமுக அணி 2 போட்டிகளில் விளையாடி இரண்டிலும் சமநிலையில் முடிவு பெற்றுள்ளது.
நாசரேத் மர்காசிஸ் அணி 1 போட்டியில் விளையாடி அதில் சமநிலை பெற்றுள்ளது.
ஐக்கிய விளையாட்டுச் சங்க அணி 2 போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் வெற்றியும் மற்றொரு போட்டியில் சமநிலையும் பெற்றுள்ளது.